tamilnadu

img

கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டம்: சமஸ்கிருதமயமே நோக்கம்!

 மத்திய - பாஜக அரசு ‘தேசிய’ கல்விக் கொள்கை   2020-ல் முன்மொழிந்துள்ள மும்மொழிக் கொள்கை குறித்து கல்வியாளர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். வரைவறிக்கையில்  பத்தி 4.5 முதல் 4.5.16 வரை மொத்தம்  16 பத்திகளில் 17 தலைப்புகளைக் கொண்ட தாக  மொழிக்கொள்கை வரையப்பட்டுள்ளது. 

பத்தி 4.5 - பன்மொழிக்கொள்கை மற்றும் மொழியின் ஆற்றல்  இதில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘2 – 8 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பலமொழிகளைக் கற்றுக் கொள்வதற்கான மிக நெகிழ்வான ஆற்றல் இருக்கிறது; 2 முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகள் மிக வேகமாகக் கற்றுக் கொள்வார்கள் பன்மொழிகளைக் கற்பது அவர்களது அறிவாற்றலை மிகவும் மேம்படுத்தும்; அதனால், குழந்தைகள் அடிப்படை நிலையிலேயே மூன்று மொழிகளைக் கற்கத் தொடங்க வேண்டும்.”இக்கருதுகோளுக்கு அடிப்படையாக இருப்பது தே.க.கொ (தேசிய கல்விக் கொள்கை) வரைவின் அத்தியாயம் ஒன்றில் உள்ள அறிமுகப் பகுதியில் சொல்லப்பட்டுள்ள விவரணையாகும்.அதில், சொல்லியிருப்பதாவது: ‘‘ஒரு குழந்தை அது பிறந்ததிலிருந்து கற்கத் தொடங்கி வருகிறது. குழந்தைகளின் ஒட்டு மொத்த மூளை வளர்ச்சியில் 85 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி 6 வயதிற்கு முன்னரே ஏற்படுகின்றது என்பதை நரம்பியல் விஞ்ஞானத்தின் சான்றுகள் பகிர்கின்றன. எனவே, நிலையானதும் ஆரோக்கியமானதுமான மூளை வளர்ச்சியினை விருத்தி செய்ய குழந்தைகளின் ஆரம்ப காலங்களில் தகுந்த பராமரிப்பும் மூளை தூண்டலும் அவசியம் என்பதை இந்தச் சான்று நமக்கு உணர்த்துகிறது.”மழலைக்கல்வி முதல் ஆரம்பக்கல்வி வரையிலான 2 - 8 வயது குழந்தைகளின் கற்றல் திறனை உடலியல் வளர்ச்சி சார்ந்த விசயமாக அணுகும் முறையிலேயே வரைவறிக்கையின் முன்மொழிவு உள்ளது. ஆனால், அது உளவியல் சார்ந்த விசயம் என்பதை சிக்மண்ட் ஃப்ராய்டின் கூற்று  உறுதிப்படுத்துகிறது.அதாவது “நடப்பு விரைவுலகில் 3 வயதிலேயே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதும் படிக்கக்கட்டாயப்படுத்துவதும் இயல்பாகி விட்டன. இது குழந்தை  ‘லிபிடோ’ (குழந்தைக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவு) வளர்ச்சியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது; சின்ன வயதிலேயே பெரும் பாடங்களைச் சுமத்தும் போது உளமாறாட்டங்கள் ஏற்பட வாய்ப்பாகிறது; பரந்து பட்ட பாடத்திட்டம் குழந்தை ‘ஈகோ’-வில்  (குழந்தையின் பாலியல் வளர்ச்சி) அமுக்கத்தை ஏற்படுத்தி பாதிப்பிற்கு வலுவூட்டுகிறது; இந்தப் பாதிப்பு பதற்றமாகிறது;  பெற்றோர் மீதான நேசம் வெறுப்பாக மாறுகிறது.” என்கிறார் ஃபிராய்டு.ஆக, தேசிய கல்வி கொள்கையின் வரைவில்உள்ள  குழந்தைகளின் கற்றல் திறன் பற்றிய கருதுகோள் அனைத்தும் பொய்யான புனைவுகளால் ஆக்கப்பட்டது என்பது அறிவியல் வழியில் நிரூபண மாகிறது.

பிரிவு 4.5.3 மும்மொழி அல்லது அதற்கும் அதிகமான மொழிகளின் அறிமுகம்

இதில் கூறப்பட்டுள்ளதாவது: 

“குழந்தைகளின் மொழி கற்கும் திறமையை உயர்த்த மழலையர் வகுப்பு மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்று அல்லது அதற்கு அதிகமான மொழிகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். மூன்றாம் வகுப்புக்குள் அம்மொழிகளில் கருத்துக்களைப் பரிமாறவும், எழுத்துக்களை இனம் காணவும், அடிப்படையான வாசிப்பு பகுதிகளை வாசிக்கவும் திறமை பெற வேண்டும் என்ற இலக்கோடு இம்மொழிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.”மூன்றாம் வகுப்புக்குள் அம்மொழிகளில் திறமை பெற வேண்டும் என்பதை ‘இலக்காகத்’ தீர்மானித்து மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த அவசரம் காட்டுவது ஏன்?மூன்றாம் வகுப்புக்கு மேல் எப்போது வேண்டு மானாலும் அப்படி வடிகட்டி வெளியேற்றப்பட்டு இடைநிற்றலுக்கு ஆளாகும் ஒரு மாணவனோ, மாணவியோ பொதுக்கல்வியில் வேண்டுமானால்  உயர்வு பெறாமல் இருக்கலாம்;  ஆனால், இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றவராயிருப்பார்கள்!   இலக்கு தீர்மானிப்பதன் நோக்கம் இப்போது புரிகிறதல்லவா? 

பத்தி 4.5.9 - மொழியைத் தேர்ந்தெடுப்பதற்கு நெகிழ்வான வழிமுறைகள்

இதில் கூறப்பட்டுள்ளதாவது: 

“மும்மொழிக் கொள்கைப்படி ஆறாம் வகுப்பு வரும் போது தனக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கலாம். அதற்கு சற்று தளர்த்தப்பட்ட விதிமுறைகள் மட்டுமே உள்ளன. இந்தி மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலங்களில் (இந்தி மொழி பயன்பாட்டில் உள்ள மாநிலங்கள் என்று குறிப்பிடுவதே சரியானது) ஒரு மொழி இந்தி;  அடுத்தது ஆங்கிலம்; பிறகு இந்திய மொழிகளுள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்;  இந்தி மொழி பேசாத மாநிலங்களில் வட்டாரமொழி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தேர்வு செய்து கொள்ளலாம்; நடுநிலைப்பள்ளி வந்த பிறகு மாணவர்கள் வேறுமொழியைத் தேர்வு செய்யும் போது முன்பு தேர்வு செய்த மொழிகளில் எதிர்பார்க்கும் திறன் பெற்றுள்ளார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்” எனக்கூறுகிறது.

ஏற்கனவே, ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆரம்பக் கல்வியில் மும்மொழிகளை கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசிய வரைவறிக்கை எந்த இடத்திலுமே அதனைக் கட்டாயம் என்றோ மும்மொழிகள் எவை என்பது பற்றியோ தெளிவாக வரையறை செய்யவில்லை.ஆனால், மேற்கண்ட பத்தியில் மும்மொழிக் கொள்கைப்படி ஆறாம் வகுப்பு வரும் போது தனக்கு ‘விருப்பமான’ மொழியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் ஆரம்பக்கல்வியில் பயிலும் குழந்தைகளுக்கு விருப்பம் என்று எதுவுமில்லை மாறாக மும்மொழிகளைப் பயில்வது ‘கட்டாயம்’  என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது.சரி... அப்படியானால், ஆறாம் வகுப்பு வரும் போதாவது மாணவ - மாணவியருக்கு தனக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிற சுதந்திரம் இருக்கிறதே என்று மகிழ்ச்சியுற்றால் வரைவறிக்கை அதற்கும் ஒரு லட்சுமணக்கோட்டைக் கிழிக்கிறது;  அதாவது, ‘சற்று’ தளர்த்தப்பட்ட விதிமுறைகளே உள்ளன என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் மேலே வழங்கப்பட்ட சுதந்திரம் - முழு சுதந்திரமாக இல்லாமல் கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரமாகவே வழங்கப்பட்டுள்ளது என்பதை நாசுக்காகத் தெரிவிக்கிறது.மேலும், அதே பத்தியில் தொடர்ந்து மும்மொழிகளைத் தேர்வு செய்வது சம்பந்தமாகக் கூறும் போது, ‘இந்தி மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் பிறகு இந்திய மொழிகளுள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என்பதன் மூலம் அம்மாநிலங்களில் இந்தியையும் ஆங்கிலத்தையும் கட்டாயமாகவும், பிற இந்திய மொழிகளை விருப்பத் தேர்வாகவும் முன் வைக்கிறது. இதில், நுட்பமாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் யாதெனில் இந்திமொழி பேசும் மாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிரதேசம் தவிர்த்து, குஜராத், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா, பஞ்சாப், தில்லி உட்பட அந்தந்த மாநிலங்களுக்கென்று தனியே தாய்மொழி உள்ளது. இருந்த போதும் வரைவறிக்கை இங்கெல்லாம் இந்தியையும், ஆங்கிலத்தையும் பயில்வதை கட்டாயமாக்கும் அதே நேரத்தில் இந்திய மொழிகள் என்னும் சொல்லாடலுக்குள் அந்த மாநிலங்களின் தாய் மொழிகளையும் கூட  விருப்பத்தேர்வில் முன்வைக்கும்  அராஜகம் இதற்குள் பொதிந்துள்ளது.

தொடர்ந்து இவ்வரைவறிக்கையானது இந்தி மொழி பேசாத மாநிலங்களில் முதலில் வட்டாரமொழியையும் அடுத்து இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறுகிறது. அதாவது இந்தி மொழி பேசாத மாநிலங்களின் மொழி ‘வட்டாரமொழியாம்’...! அதை கற்றல் மொழி வரிசையில் முதன்மையாக வைத்திருப்பதன் மூலம்  மாநில மொழிக்கு கட்டாய அந்தஸ்து கொடுப்பது  போல் தோன்றினாலும், அடுத்து இரண்டு மொழிகளில் இந்தியையும், ஆங்கிலத்தையும் விருப்பத் தேர்வாக முன் வைக்கிறது;  இதில், எங்கே விருப்பத்தேர்வு உள்ளது? விருப்பத் தேர்வின் அர்த்தமென்ன? செம்மொழிகளையோ (அல்லது) 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளோடு ஆங்கிலத்தையும் சேர்த்து பட்டியலை முன்மொழிந்து அதில் விருப்பத் தேர்வாக ஏதேனும் இரண்டு மொழிகளை தேர்வு செய்யலாம் என்று சொன்னால் தான் விருப்பத் தேர்வுக்கான சுதந்திரமே ஒருவருக்கு வழங்கப்படுகிறது என்று அர்த்தம். அவ்வாறின்றி தேர்வு செய்ய வேண்டிய மொழிகளை முன்மொழிந்து விட்டு அதையே விருப்பத் தேர்வாகக் கொள்ளலாம் எனக்கூறுவது விருப்பத் தேர்வல்ல மாறாக இது ‘கட்டாயத் தேர்வாகும்’...!

பத்தி 4.5.13 - இந்திய இலக்கியங்களிலிருந்து பொருத்தமான பகுதிகளை உட்படுத்துதல் 

இதில் கூறப்பட்டுள்ளதாவது: 

“கிரேக்க லத்தீன் மொழிகளின் இலக்கியங்கள் இரண்டையும் சேர்த்தாலும் வடமொழியில் படைக்கப்பட்ட இலக்கியங்களுக்கு நிகராகாது.”தொடர்ந்து பத்தி 4.5.14-ல் ‘‘வடமொழி அறிவுக் களஞ்சியமாகத் திகழ்கிறது. அறிவியல், கணிதம், மருத்துவம், சட்டம், பொருளாதாரம், அரசியல், இசை, மொழியியல், நாடகம், கதை கூறுதல், கட்டடக்கலைபோன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தங்கள் அறிவை வடமொழியில் வடித்துள்ளனர்” என்றும், தொடர்ந்து ‘‘வரலாற்றையேபுரட்டிப் போடும் வகையில்  வடமொழியில் எழுதப்பட்ட படைப்புகளை பள்ளிப் பாடங்களோடு எங்கெங்கு  பொருத்த முடியுமோ, அங்கங்கு சேர்த்து அவற்றைக் கற்பிக்க ஆவன செய்ய வேண்டும்” எனவும் கூறுகிறது.

இறுதியாக,‘ ‘8வது அட்டவணையில் உள்ள மொழிகளுக்கு இணையாக வடமொழியையும், பள்ளியின் எல்லா நிலைகளிலும் மற்றும் உயர் கல்வியிலும் விருப்பப் பாடமாக கற்பதற்கு வகை செய்யப்படும்” என்றுரைக்கிறது.இதுவரை ஆரம்பக்கல்வியில் மும்மொழிக் கற்றலில் இந்தியையும், ஆங்கிலத்தையுமே முன்னிறுத்திப் பேசிய வரைவறிக்கை இப்போது வடமொழியைஉயர்த்திப் பிடிக்கிறது. அதுவும் எப்படி தெரியுமா?  8வது அட்டவணையில் உள்ள மொழிகளுக்கு இணையாக - அதாவது 22 தேசிய இனங்களின் மொழிகளுக்கு நிகராக ‘எந்தவொரு’ தேசிய இனத்தின் அடையாளமும் இல்லாத, அதே நேரத்தில் தமக்கு மட்டுமே உரித்தானதாக தனியுரிமைக் கொண்டாடும் ‘பிராமணிய சாதிய மேலாதிக்க குழுக்களின்”  (தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை வெறும் 22000 பேர் மட்டுமே) மொழியான சமஸ்கிருதத்தை பயிற்றுவிக்க நினைப்பது கல்வி சார்ந்த முனைப்புஎன்பதை விட ‘இந்துராஷ்டிர’ அரசியல் முன்னெடுப்பின் ஓர் அம்சம் தான்   என்பதைத் தவிர வேறென்ன?!

=====ம. பாலசுப்பிரமணியன்====
மாநிலத் துணைத் தலைவர், தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி

;